கோத்தபாயவை நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை: உச்சநீதிமன்றம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்தது. தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 உச்சநீதமன்ற நீதியரசர்களான ஈவா வனசுந்தர மற்றும் சரத் டீ ஆப்ரூ ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தடையுத்தரவை மீண்டும் உறுதிசெய்தது. 

கோத்தபாய ராஜபக்சவை குறிப்பிட்ட நான்கு வழக்குகளில் மட்டுமே கைது செய்யத்தடை என்றும் அவை தவிர மற்ற வழக்குகளில் அவரைக் கைது செய்வதற்கு தடை இல்லை என்றும் இலங்கை உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. 

 நாட்டின் காவல்துறை தலைவர், குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் நிதி மோசடிகள் குறித்து ஆராயும் காவல்துறையின் பிரிவுகள் ஆகியவை மட்டுமே அவரை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

 தன்னைக் கைது செய்யக்கூடாது என அவர் சமர்ப்பித்த மனுவை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கு தடை விதித்திருந்தது. இதன் காரணமாக அவர் மீதான வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவரை கைது செய்ய முடியுமா எனும் கேள்விகள் எழுந்திருந்தன. அதைத் தெளிவுபடுத்துமாறு கோரி சட்டமா அதிபர் சிறப்பு மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத்துறை, நிதி மோசடிகளை ஆராயும் சிறப்பு காவல்துறை பிரிவு ஆகியோரால் மட்டுமே அவரைக் கைது செய்ய முடியாது என தெளிவுபடுத்தினர். 

 இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை வாங்கியது, மற்றும் சிறிய ரக விமான சேவையான மிஹின் லங்கா நிறுவனத்துக்கு விமானங்கள் வாங்கிய போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பானக் குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக மட்டும் அவரைக் கைது செய்ய முடியாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதே நேரம் ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற ஏனைய விசாரணைக் குழுக்களால் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்வதற்கு தடை ஏதுமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Related

Popular 4649006267603690351

Post a Comment

emo-but-icon

Like us on Facebook

Cartoon of the Week

cartoon

Popular Posts

item