ஜனாதிபதியின் உலக சுற்றாடல் தின செய்தி
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_64.html
மனிதனுக்கும் சூழலுக்கும் இடையில் நிலவுகின்ற நல்லிணக்கமும் சகவாழ்வும், புவிப் பரப்பில் உயிர்களின் வாழ்க்கை தொடங்கிய வரலாறு ஆரம்பமான காலம் வரை செல்கின்ற செழிப்பான ஓரு பிணைப்பாகும்.
1972ஆம் ஆண்டு நடைபெற்ற சூழல் மகாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் சூழலை பாதுகாப்பதற்காக உலக வாழ் மக்களின் கவனத்தை திருப்பும்முகமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி உலக சுற்றாடல் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இம்முறை சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் “நிலையான பயன்பாடு – புவிபரப்பை பாதுகாக்கிறது” என்பதாகும்.
இயற்கையின் பிள்ளைகள் என்ற வகையில் சூழலுக்கு எதிரான மனித செயற்பாடுகளை தடுத்து இயற்கை மரபுரிமைகள் தடையின்றி நிலைபேறாக இருப்பதற்கு எம்மை அர்ப்பணித்துக் கொள்வது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.
அதன்போது விலங்குகள், தாவரங்கள் கட்டளைச் சட்டத்தை துணிச்சலுடனும் பக்கச்சார்பற்ற வகையிலும் தீவிரமாக செயற்படுத்துவதும், அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் எண்ணக்கரு ரீதியாக இருக்கின்ற நிலையிலேயே சூழலியல் தாக்கம் தொடர்பான அடிப்படை மதிப்பீட்டு அறிக்கையினூடாக சூழல் நேயம் கொண்ட கருத்திட்டமாக ஆரம்பிப்பதும் சூழல் தொடர்பாக எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையாகும்.
எமது அரசு, காடுகளும் வன சீவராசிகளும் பாதுகாப்பாக இருப்பதற்காக அவை அழிக்கப்படுவதை தடுக்கின்ற அதேவேளையில், கூருணர்வுமிக்க சூழல் முறைமையை பாதுகாப்பதற்காகவும் புதிய சட்டங்களை இயற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளையில், அவற்றை அழிக்கின்ற சக்திகளை அந்தஸ்து பாராமல் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சூழலை அழிக்கும் அனைத்து செயல்களுக்கு எதிராக சட்டத்தை வலுவுள்ளதாக்கி சூழலையூம் மரம், செடி, கொடிகளையும் விலங்குகளையும் நேசிக்கின்ற சந்ததி ஒன்றை உருவாக்குவது இவை அனைத்தின் மூலமும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை உலக சுற்றாடல் தினத்தில் சூழலைப் பாதுகாக்கின்ற அத்தகைய நாளைய பொழுதொன்றை உருவாக்குவதே அனைவரினதும் இலட்சியமாகும்.
மைத்ரிபால சிறிசேன.
