ஒன்பது வயது சிறுமி கடத்தல்: மத்துகம பிரதேசத்தில் சம்பவம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_5.html
மத்துகம, மீகஹதென்ன பொலிஸ் பிரிவின் பெலவத்த - மிரிஸ்வத்தை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த சிறுமியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் நேற்று முன் தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
"எவ்வாறெனினும் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கையின் மூலம் சுமார் 9 மணி நேரத்தில் சிறுமி காட்டுப் பகுதியொன்றுக்குள் இருந்து கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை தேடி இராணுவத்தினருடன் இணைந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸ்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
நேற்று முன் தினம் காலை 10.30 அளவில் சிறுமி தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன் போது அங்கு வந்த நபர் ஒருவர் அவரை கடத்திக்கொண்டு கொஸ்கெட்டிய காட்டுப் பக்கம் சென்றுள்ளார். பொலிஸாருக்கு விடயம் அறிவிக்கப்படவே அவர்கள் விரைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இதன் போது சிறுமியின் தாயின் இளைய சகோதரியுடன் தொடர்பை பேணுபவரே சிறுமியைக் கடத்தியுள்ளதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமியை தேடும் நடவடிக்கையை இராணுவத்துடன் இணைந்து சுமார் 9 மணி நேரம் முன்னெடுத்த பொலிஸார் கொஸ்கெட்டிய காட்டிலிருந்து சிறுமியை மீட்டனர்.
எனினும் சந்தேக நபர் பெலவத்த குளத்தில் பாய்ந்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் நேற்று முழு நாளும் விஷேட தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
-vk
