மாணவர்களை போதைப்பொருட்களில் இருந்து பாதுகாக்க விரிவான தேசிய வேலைத்திட்டம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_11.html
மாணவர்களை போதைப்பொருட்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி கூறினார்.
போதைப்பொருள் தொடர்பான சட்ட திட்டங்களை எதிர்காலத்தில் மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி நல்லதொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு சவாலாக இருக்கின்ற போதைப்பொருட்களை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்காக எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகக் கூறினார்.
காலி றிச்மன்ட் வித்தியாலயத்தில் 138 ஆவது வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
சமூகத்தைப் பற்றிக்கொண்டிருக்கின்ற போதைப்பொருள் காரணமாக அநாகரீகம், ஒழுக்கமின்மை என்பவை நாடு முழுவதிலும் பரவியுள்ளதென்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இந்த துன்பத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக்கொள்வதில் மேலும் காலம் தாழ்த்த முடியாதென்பதையும் தெரிவித்தார்.
அத்துடன் இணையத்தளத்திலும் தொலைக்காட்சியிலும் பார்க்கின்ற ஒரு சில காட்சிகள் சிறுவர் மனங்களை திரிபுபடுத்துவதாகவும் அது தொடர்பில் கவனம் செலுத்தி ஏதேனும் ஒழுங்கு முறையான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்புள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
