வில்பத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் இல்லை.. - ராஜித சேனாரத்ன

வில்பத்து சரணாலயத்தில் சட்டவிரோத குடியேற்றங்கள் எதுவும் இல்லை என்றும் அவ்வாறு இருக்குமாயின் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே, மாறாக ரிஷாத் பதியுதீன் அல்ல என சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:- 

 அண்மைக்காலமாக வில்பத்து சரணாலய விடயம் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. இதில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது தொடர்பில் நாங்கள் ஆராய நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த விடயம் கடந்த ஆட்சியின்போதும் அமைச்சர் ஒருவரை குறிவைத்து பேசப்பட்டது. 

 யுத்தகால சூழ்நிலையால் வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் உள்ளனர். அதில் அநேகமானவர்கள் புத்தளத்தில் வாழ்கின்றனர். அதேபோன்று தமிழ் மக்கள் 2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களும், சிங்களவர்களும் புலம்பெயர்ந்திருந்தனர். 

முஸ்லிம்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியேற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமைச்சர் ரிஷாத் வில்பத்து சரணாலயத்துக்கருகில் மக்களைக் குடியேற்றினார். இதன்போது ஆட்சியிலிருந்த மஹிந்த இது தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றை அமைத்திருந்தார். இந்தத் தீர்மானத்துக்கு அமையவே அங்கு குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, மஹிந்தவின் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்ட அக்குடியேற்றத்துக்கு குற்றவாளி அவரே. மாறாக ரிஷாத் அல்லர் என்றார். 

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் ரிஷாட் கரிசனை செலுத்துவது போன்று வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்காதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கும்போது, வவுனியாவில் 3 ஆயிரத்துக்கு அதிகாமான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்தும் கொடுக்கப்பட்டுள்ளன. 

சிங்களவர்களுக்கு அரசு அதிக சலுகை வழங்குவதாக சிறுபான்மையினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இவ்வாறான நிலையில், நாங்கள் சிங்களவர்களைக் குடியமர்த்தவில்லை என்று கூறமுடியாது. எவரையும் நாம் பலவந்தமாகக் குடியமர்த்த முடியாது என்றார். (ET)


Related

Popular 2349745201812530956

Post a Comment

emo-but-icon

item