வட கொரிய அதிபர் தலைமையேற்ற பேரணியில் தூங்கிய பாதுகாப்பு உயரதிகாரிக்கு மரணதண்டனை
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_675.html
வடகொரியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹ்யோன் யோங் - சோலுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தென்கொரியாவின் உளவு நிறுவனம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதிபர் கிம் ஜோங் - இல்லுக்கு விசுவாசமாக இல்லாததால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் முப்பதாம் தேதி, விமான எதிர்ப்புத் துப்பாக்கியின் மூலம் நூற்றுக்கணக்கானவர்களுக்கு முன்பாக ஹ்யோன் கொல்லப்பட்டதாக தென் கொரிய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் கிம் ஜோங் - யுன் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில், ஹ்யோன் தூங்கிவிட்டதால் அதிபர் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
வட கொரியாவில் அதிகாரிகளை மாற்றுவது என்பது அடிக்கடி நடக்கும் நிகழ்வாகும். ஆனால், அதிபருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவர் கொல்லப்பட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாகவும் அந்நாட்டின் ஸ்திரத்தன்மை குறித்த கவலையை ஏற்படுத்துவதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் தேதிக்கு முந்தைய தினம் அவர் தொலைக்காட்சியில் தோன்றியதாக என்கே நியூஸ் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டிலிருந்தே ஹ்யோன் ஜெனரலாக இருந்துவந்தாலும் அவரைப் பற்றி அதிகத் தகவல்கள் தெரியவரவில்லை. முந்தைய அதிபர் 2011 டிசம்பரில் இறந்தபோது, அவரது இறுதிச் சடங்கை நடத்துவதற்கான குழுவில் ஹ்யோன் இடம்பெற்றிருந்தார். அவரது செல்வாக்கு அதிகரித்துவருவதை இது காட்டியது.
கடந்த ஆண்டு ஹ்யோன், அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
