மைத்திரி, ரணிலுக்கு எதிராக முறைப்பாடு
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_674.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உதய கம்மன்பிலவே இந்த முறைப்பாட்டை இன்று புதன்கிழமை(13) செய்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அதாவது, 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன (தற்போதைய ஜனாதிபதி) தான் வெற்றிபெற்றால் ஐக்கிய தேசியக்கட்சின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பேன் என்று கூறியிருந்தார். அதற்கு எதிராகவே உதய கம்பன்பில, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
1981 இலக்கம் 15, ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தலில் தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்தி கொள்வதற்காக பதவிகளுக்கு உறுதியளித்தல், பதவி வழங்குதல் மற்றும் பதவியை ஏற்றுகொள்ளல் இலஞ்ச குற்றச்சாட்டாகும். அதன்பிரகாரம், ஜனாதிபதி சிறிசேன, ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பதவியை உறுதியளித்தமை மற்றும் வழங்கிய குற்றமிழைத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த பதவியை பெற்று குற்றமிழைத்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
