டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பாக்கிஸ்தான்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_669.html
பங்களாதேஷுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் அணி இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது.
இரண்டு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி பாக்கிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு கேட்டுக் கொண்டது. அதன் படி துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 557 ஒட்டங்களைக் குவித்து தனது இன்னிங்ஸை இடை நிறுத்திக் கொண்டது. இதில் அஸ்ஹர் அலி 226, யூனிஸ் கான் 148 மற்றும் அஸாத் ஷபீக் 107 என்ற அடிப்படையில் ஒட்டங்களைப் பெற்றனர்.
பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி பாக்கிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 203 ஒட்டங்களுக்குள் சுருண்டது. இதில் அதிக பட்சமாக சகிப் அல் ஹஸன் ஆட்டமிழக்காமல் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
பின்னர் 354 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த பாக்கிஸ்தான் அணி மீண்டும் துடுப்பெடுத்தாடி 6 விக்கட் இழப்புக்கு 195 ஓட்டங்களைப் பெற்று தனது 2வது இன்னிங்ஸையும் இடை நிறுத்திக் கொண்டது.
550 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்கை வைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு மீண்டும் ஏமாற்றமே காத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 221 ஓட்டங்களுக்கு சகல விக்கட்களையும் இழந்த பங்களாதேஷ் அணி 328 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
ஆட்ட நாயகனாக பாக்கிஸ்தான் அணியின் அஸ்ஹர் அலி தெரிவானார்.
