பாலஸ்தீன அதிபரை சமாதானத் தூதர் என்று பாராட்டிய பாப்பரசர்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_490.html
பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை வத்திக்கானில் சந்தித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ், அவரை சமாதானத்துக்கான தூதர் என்று பாராட்டினார்.
பாலஸ்தீனத் தலைவருக்கு பாப்பரசர் ஞாபகார்த்தச் சின்னம் ஒன்றையும் வழங்கினார்.
பாலஸ்தீனத்துடன் முதலாவது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட ஆயத்தமாகி வருவதாக வத்திக்கான தெரிவித்திருந்த சில நாட்களில் பாலஸ்தீன தலைவரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
பாலஸ்தீன பிரச்சனைக்கு இரண்டு-தேசங்கள் என்ற தீர்வுக்கு இந்த உடன்படிக்கை ஆதரவளிக்கின்றது.
'பாலஸ்தீன ஆட்சிக்கு' உட்பட்ட பிரதேசங்களில் கத்தோலிக்கர்களின் விவகாரத்தை வத்திக்கான் மேற்பார்வை செய்வதற்கும் உடன்படிக்கையில் ஏற்பாடு உள்ளது.
உடன்படிக்கையில் இடம்பெறுகின்ற 'பாலஸ்தீன தேசம்' என்ற சொற்பிரயோகம் தொடர்பில் இஸ்ரேல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
19-ம் நூற்றாண்டுக் காலத்து பாலஸ்தீனிய கன்னியாஸ்திரிகள் இருவரை கத்தோலிக்க மதத்தின் புனிதர்களாக பிரகடனப்படுத்தும் நிகழ்வுக்காகவே மஹ்மூத் அப்பாஸ் வத்திக்கான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. - BBC
