புங்குடுதீவு மாணவி படுகொலையும், தொடரும் ஆர்ப்பாட்டங்களும்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_258.html
யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
மாணவி படுகொலைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதேவேளை குறித்த மாணவியின் படுகொலையை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்துகொண்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் மாணவியின் படுகொலையுடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், இதுபோன்ற கொடூரச் செயல்களைத் தடுக்கக்கோரியும் மாணவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு முன்பாகக்கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புங்குடுதீவு வல்லனை பகுதியைச் சேர்ந்த ரவி, செந்தில் மற்றும் சின்னாம்பி ஆகியோரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.




