நிலநடுக்கத்தால் திறந்தவெளியில் தேர்வு எழுதிய மாணவர்கள்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_252.html
பீகார், உ.பியில் மீண்டும் ஏற்பட்ட பூகம்பத்தில் 18 பேர் பலியானார்கள். நில நடுக்கத்தால் மாணவர்கள் திறந்த வெளியில் தேர்வு எழுதினர் நேபாளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் திகதி ஏற்பட்ட பூகம்பத்தின் போது அதனையொட்டி உள்ள இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பூகம்பம் ஏற்பட்டு 80–க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
இதில் பீகார் மாநிலத்தில் தான் கடும் சேதம் அடைந்தது. அங்கு மீட்பு பணிகள் முடிந்து மக்கள் நிம்மதியுடன் நடமாடிய நிலையில் நேற்று மதியம் மீண்டும் நேபாளத்திலும் அதனையொட்டியுள்ள பீகார், மேற்கு வங்காளம், உ.பி.யில் பூகம்பம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் உருவானது.
முதல் நிலநடுக்கம் 7.3 ஆகவும், 2–வது நிலநடுக்கம் 6.2 ஆகவும் ரிக்டர் அளவில் பதிவானது. அப்போது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கியது.
பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். பீகார் மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 16 பலியானார்கள்.
பீகாரின் தர்பங்காவில் விஸ்வித்யாலயா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிக் கட்டிடம் இடிந்தது. உடனே மாணவர்கள் அவசரமாக வெளியே ஓடி உயிர் தப்பினார்கள். என்றாலும் கட்டிடத்தின் உள்ளே 12 மாணவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் உத்தரப்பிரதேசத்தில் சம்பால் மாவட்டம் பர்த்தால் கிராமத்தில் ஒருவரும், ஹமிர்பூர் மாவட்டம் தோகா பகுதியில் ஒருவரும் வீடு இடிந்து பலியானார்கள்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து 20 பேர் காயம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தின்போது மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் ஒரு கல்லூரியில் தேர்வு நடந்து கொண்டு இருந்தது. நிலநடுக்கத்தில் கட்டிடம் அதிர்ந்ததால் மாணவ– மாணவிகள் பீதியுடன் வெளியேறினார்கள். தொடர்ந்து வகுப்பறைக்கு செல்ல மாணவர்கள் பயந்ததால் அவர்கள் திறந்த வெளி மைதானத்தில் தரையில் அமர்ந்தவாறு தேர்வு எழுதினார்கள்.
மேலும் சிலிகுரியில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர். உ.பி., பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட் டுள்ளனர். இந்த 3 மாநிலங்களிலும் பல கிராமங்களில் மக்கள் நிலநடுக்க பீதியில் இரவு முழுவதும் வீடுகளுக்கு செல்லாமல் திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர்.
