சிறு கட்சிகள் 13 யோசனைகள் முன்வைப்பு: சந்திரிக்காவையும் சந்தித்து வலியுறுத்து!
http://weligamanewsblog.blogspot.com/2015/05/13.html
புதிய தேர்தல் திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் இருந்து 13 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
13 கட்சிகளிடம் இருந்து இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகர் திலக் ரணவிராஜா தெரிவித்தார்.
தேர்தல் திருத்தம் தொடர்பில் யோசனைகளை முன்வைக்க அரசியல் கட்சிகளுக்கு இன்று பகல் 12 மணிவரை கால அவகாசம் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள யோசனைகளை அமைச்சரவையில் சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக திலக் ரணவிராஜா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் உள்ளிட்ட சிறு கட்சிகள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் தங்களது யோசனை அடங்கிய ஆவணத்தை கையளித்தனர்.
அதன்பின்னர் மனோ கணேசன், ரவுப் ஹக்கீம், ராதாகிருஸ்ணன், ஹமீட் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்து, தங்கள் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும்படி கேட்டுக் கொண்டனர்.
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வர முக்கிய பங்களிப்பு செலுத்திய சிறுபான்மை கட்சிகள் என்ற அடிப்படையில் இந்த கோரிக்கையை முன்வைத்ததாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.
மேலும் புதிய தேர்தல் முறை தொடர்பில் தாம் முன்வைத்துள்ள யோசனையில் வடக்கு கிழக்கிற்கு வௌியில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதிகள் பிரிக்கப்பட வேண்டும் என கேட்டுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்தார்.
மேலும் தொகுதி மீள்நிர்ணய குழுவில் அடங்கவுள்ள ஐந்து பேரில் தேர்தல்கள் ஆணையாளர் உறுப்பினராகவும் இணைத் தலைவராகவும் இருக்க வேண்டும்.
இக்குழுவில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு பேர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும். (01.மலையக தமிழர் சார்பில் ஒருவர், 02.முஸ்லிம்கள் சார்பில் ஒருவர், 03.இலங்கை தமிழர் சார்பில் ஒருவர், 04.வடகிழக்கில் உள்ள சிங்கள சிறுபான்மையினர் சார்பில் ஒருவர்)
பல் அங்கத்தவர் தொகுதியின் எண்ணிக்கையில் குறைந்தது என்ற சொல்லை அகற்றி தேவைக்கு ஏற்ப என்ற சொல்லை சேர்த்தல்.
சிறு தொகை மக்கள் வாழும் பகுதிகளில் சிறுபான்மை மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் சிறு எண்ணிக்கை வாக்காளர்கள் கொண்ட தொகுதிகளை உருவாக்குதல்.
நாட்டின் இன விகிதாரசாரத்தை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். - போன்ற சில முக்கிய யோசனைகளை சிறுகட்சிகள் சார்பில் முன்வைத்துள்ளதாக மனோ கணேசன் அத தெரண தமிழிணையத்திடம் தெரிவித்தார்.
