டெஸ்ட் தொடரை வென்றது அவுஸ்திரேலியா
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_76.html
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 277 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 399 ஓட்டங்களும், மேற்கிந்தி யத் தீவுகள் 220 ஓட்டங்களும் எடுத்தன.
தொடர்ந்து 179 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலியா 65 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதனால் மே.இ.தீவுகளுக்கு 392 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-ஆவது நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 16 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் பிராவோ (11), டவ்ரிச் (4), பிளாக்வுட் (டக் அவுட்) என மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் வந்த வேகத்தில் வரிசையாக ஆட்டமிழந்தனர்.
42-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்தியத் தீவுகள் 114 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் 277 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி பெற்றது. மேலும் 2-–0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
