நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பமே பிழையானது - சரத் என் சில்வா
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_825.html
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆரம்பமே சட்டவிரோதமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், அரசாங்கம் நடவடிக்கைகளில் தோல்விக்கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று தாம் நினைக்கவில்லை.
இந்தநிலையில் அவருக்கு ஆதரவான கூட்டங்களில் பேசுவதற்காக தமக்கு பட்டியல் ஒன்று அனுப்பப்பட்டது.
எனினும் அந்தப் பட்டியலை தாம், குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டதாக சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுடன் தமக்கு 18வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலேயே முரண்பாடு இருந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது அங்கு பிரதம நீதியரசர் இருக்கவில்லை.
அதேநேரம் பிரதமர் ஒருவர் பதவியில் இருக்கும் போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.
இதுவா? நல்லாட்சி என்று சரத் என் சில்வா கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விலக்கப்பட்டமையானது நீதித்துறையை கேலிக்குள்ளாக்கிய சம்பவமாகும் என்றும் சில்வா குறிப்பிட்டார்.
நாட்டின் நீதிமன்றங்கள் இரவு 9 மணி வரையும் திறந்துள்ளன என்று குறிப்பிட்ட அவர் அரசாங்கம் அபாயகராமான பாதையில் பயணிப்பதாக எச்சரித்தார்.
தேர்தலில் தோல்வியடைந்ததும் மஹிந்த ராஜபக்ச, உரியமுறையில் அங்கிருந்து சென்றார். இதனால் அவருக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர் கொழும்பு நகரத்தில் பிறந்த ரணில் விக்ரமசிங்கவை போன்றவர் அல்ல. ரணில் விக்ரமசிங்க, அவர் செய்வது அனைத்துமே சரி என்ற அடிப்படையில் தம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சரத் என் சில்வா குறிப்பிட்டார்.
