எனது மீள்வருகையால் கதிகலங்கியிருக்கின்றது அரசாங்கம் - மஹிந்த
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_559.html
ஊழல்மோசடி குற்றச்சாட்டுகளை தெரிவித்து அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கைதுகள் பிழையான எடுத்துக்காட்டுகளை வெளிப்படுத்துவதாக முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, அடுத்து வரும் அரசாங்கமும் இவ்வாறான நிலைமையை தொடராமலிருக்க அவதானமாக செயற்படவேண்டும்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுநாராஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற அங்கவீனமுற்ற ராணுவத்தினர்மற்றும் அவர்களின் உறவினர்களுடனான சந்திப்பின் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தகருத்தை வெளியிட்டார்.
இதன்போது செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இது ஜனநாயகமும் அல்ல, சிறந்த ஆட்சியும் இல்லை என குறிப்பிட்டார்.
ஆனால் முன்னைய அரசாங்கத் தரப்பினரை திருடர்கள் என கூறுகிறார்.
இறுதியாக வாகனங்களையும், உடமைகளையும் பயன்படுத்தினார்கள் என குற்றம்சுமத்துகிறார்.
ஏன் இந்த அரசாங்கத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படவில்லையா என அவர்கேள்வியெழுப்பினார்.
இது நகைச்சுவையான விடயமாக இருக்கிறது.
பழிவாங்கல்நோக்கில் இடம்பெறும் இந்த சம்பவங்களுக்கு காவல்துறையும், உடந்தையாகசெயற்படுகின்ற நிலையில், நீதிமன்றமாவது சுயாதீனமாக செயற்பட்டு ஒருஅறிவித்தலை விடுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
மேலும் எனது மீள்வருகை அரசாங்கத்திற்கு அச்ச த்தை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர் அமைப்புக ளின் தேவைக்காக என்னை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர்.
பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி பழிவாங்கவே ரணில் முயற்சிக்கின்றார். ஆனால் சவால்களுக்கு முகங்கொடுக்க நான் தயார்.
இந்த நாட்டை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டெடுக்க நாம் பாரிய தியாகத்தை செய்தோம். இராணுவ வீரர்களின் தியாகமும் எனது அரசாங்கத்தின் துணிச்சலுமே இந்த நாட்டை வெற்றிகொண்டது. ஆனால் அவை அனைத்தையும் இன்றுள்ள அரசியல்வாதிகள் மறந்துவிட்டனர். அன்று இருந்த நிலைமை இன்று நாட்டில் இல்லை. இராணுவமும் மக்களும் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். அன்று எம்முடன் இருந்தவர்கள் இன்று விலை போய்விட்டனர். சேரக்கூடாத கூட்டணிகள் இன்று ஒன்றாக சேர்ந்து சதி செய்கின்றன.
நாட்டில் அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டுய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. நான் சரியான பொருளாதார வளர்ச்சியில் இந்த நாட்டை ஒப்படைத்தேன். ஆனால் புதிய அரசாங்கத்தின் குறுகிய காலத்தில் பொருளாதாரம் வீழ்ச்சிகண்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவம் மோசமான நிலையில் உள்ளது. குறுகிய காலத்திலேயே இந்த அரசாங்கம் முட்டி மோதிவிட்டது. நாட்டை எப்படி ஆட்சி செய்வது என்பது இவர்களுக்கு தெரியவில்லை.
இந்த நாட்டு மக்களை பாதுகாத்தது யார் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். நான் மக்களுக்கு செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டாம். நாட்டில் மீண்டும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளது. இராணுவத்தை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது,.ஆனால் இந்த அரசாங்கம் அவற்றை கவனத்தில் கொள்ளவில்லை. புலம்பெயர் அமைப்புகளின் தேவைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றும் வகையில் செயற்படுகின்றது. அரசாங்கம் முழுமையாக பழிவாங்கலையே செய்கின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தூண்டுதலில் என்னையும் கைது செய்ய பிரதமர் ரணில் முயற்சிக்கின்றார்.
அரசாங்கம் எமது உறுப்பினர்களை கைது செய்வதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகளின் தூண்டுதல் உள்ளது. என்மீது குற்றம் சாட்டுவதும் எனது குடும்பத்தை குற்றவாளியாக்குவதும் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட பழிவாங்கல் மட்டுமேயாகும்.
நான் தேர்தலில் தோற்றதும் அமைதியாக நாட்டை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டேன். நான் அமைதியாக இருந்தாலும் மக்கள் என்னை அமைதியாக செயற்பட அனுமதிக்கவில்லை. அதனால் தான் நான் மக்களை சந்திக்க வந்தேன். ஆனால் எனது மீள் வருகை இந்த அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. என்னை கண்டு இவர்கள் அஞ்சுகின்றனர். இவர்களுக்கு சவாலான நபர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் பார்க்கின்றனர். எனது ஒரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சகோதரர் மீது அரசாங்கம் இலக்கு வைத்துவிட்டது. நாமும் இவர்களின் இலக்காக மாறிவிட்டேன். ஆனால் நான் சவால்களுக்கு முகம் கொடுக்க தயாராக உள்ளேன். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொள்வேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவைசந்தித்தார்.
இதுதவிர, அவர் கொழும்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்ணான்டோவையும்சந்தித்து சுகநலன்களை கேட்டறிந்தார்.
