ஐ.தே.கட்சியின் சதி வலையில் சிக்க மாட்டோம்: அனுர பிரியதர்சன
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_406.html
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைவருக்கும் வேட்பு மனுக்கள் வழங்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் வேட்பு மனுக்கள் வழங்கப்படும்.
வேட்பு மனு வழங்குவதற்கு வேறும் தகுதிகள் எதுவும் தேவையில்லை. சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் சதி வலையில் நாம் சிக்க மாட்டோம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அவருக்கு வேட்பு மனு வழங்கப்படுமா என ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பவீர்களா என அனுர பிரியதர்சன யாபா கேள்வி எழுப்பியுள்ளார்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வழக்குத் தொடரப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவிற்கு வேட்பு மனு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பும் முதுகெலும்புடைய ஊடகவியலாளர்கள் எவரேனும் இருக்கின்றீர்களா என அவர் கடுமையான தொனியில் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
