மலேசிய விமானத்தைத் தேடியவர்களுக்குக் காணாமல் போன கப்பல் சிக்கியது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_372.html
காணாமற்போன மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தை தேடும் பணியின் போது, விபத்துக்குள்ளானதென்று அறியப்படாத கப்பலின் துண்டங்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது ஒரு ஆச்சரியகரமான கண்டுபிடிப்பு என்று கூறிய தேடும் குழுவின் தலைவர் பீட்டர் ஃபாலி, ஆனால் இதை தாங்கள் தேடிக்கொண்டிருக்கவில்லை என்றார்.
ஆனால் இந்த கண்டுபிடிப்பு இந்த இடத்தில் நடந்திருப்பதன் மூலம், தேடப்பட்டுவரும் விமானம் இந்த இடத்தில் விழுந்திருந்தால் அதுவும் கண்டுபிடிக்கப்படலாம் என்பதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கப்பலின் துகள்கள் ஒலியை வைத்து அறியும் கருவி மூலம் கடலுக்கடியில் ஏறக்குறைய 4 கிமீ ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
அது விமானத்தின் துகள்கள் இல்லை என்று உணர்ந்தாலும், அது என்னவென்று கண்டறிய அதிகாரிகள் நீரில் மூழ்கிப் படமெடுக்கக்கூடிய கேமெரா ஒன்றை அனுப்பினர்.
எம்.எச்.370 விமானம் கடந்த ஆண்டு கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்று கொண்டிருந்த போது காணாமல் போனது.
அதில் 239 பேர் பயணம் செய்தனர். அந்த விமானத்துக்கு என்ன ஆனது என்றோ, அது ஏன் காணாமல் போனது என்றோ தெரியவரவில்லை.
உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், 19 ஆம் நுரற்றாண்டு காலத்திய சரக்குக் கப்பல் என, மேற்கு ஆஸ்திரேலியாவின் கடல்சார் அருங்காட்சியத்தின் மூத்த கடல் தொல்பொருள் ஆய்ளர் மைக்கேல் மக்கார்த்தி தெரிவித்தார்.
கடற்பயணத்தின் போது, இந்தியப் பெருங்கடலில் கப்பல்கள் மூழ்கிய சம்பவங்கள் அதிகம் உள்ளன என குறிப்பிட்ட மக்கத்தே, எவ்வாறாயினும் தொலைந்து போன கப்பல்களின் முழு விபரம் இல்லாத நிலையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் எது என அடையாளப்படுத்துவது மிக கடினமான விடயம் என்றார்.
இந்த எம்.எச்.370 விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படும் மேற்கு ஆஸ்திரேலிய கரையின் அப்பால் உள்ள, 60,000 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவான கடற்பரப்பை இலக்கு வைத்து, தேடுதல்கள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.
தற்போது தேடுதல் இடம்பெறும் பகுதியினுள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தேடுதல் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என, கடந்த மாதம் அதிகாரிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. - BBC


