பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் கைது
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_320.html
பாணந்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவர் தாஹிர் பாஸி இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பாணந்துறை, கெசெல்வத்தை பொது சந்தை கட்டடத்தின் ஒப்பந்தக்காரர் தொடர்பில் நேற்று (15) ஏற்பட்ட தகராறு காரணமாகவே எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த சந்தைக் கட்டிட தொகுதி மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் எதிர்பாராத வகையில் அங்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் தாஹிர் பாஸி சந்தைக் கட்டிட தொகுதியை திறந்து வைக்க முற்பட்டுள்ளார்.
இதனால் அங்கு கூடியிருந்த ஒப்பந்தகாரர்களும், பிரதேசவாசிகளும் எதிர்க்கட்சி தலைவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாகவே எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஒப்பந்தக்காரருக்கும், பாணந்துறை பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவருக்கும் எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இரண்டு பேரும் பொலிஸ் கண்காணிப்பின் கீழ் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (ET)
