வில்பத்து சரணாலயத்தில் முஸ்லீம்கள் குடியேற்றம் என்று பிக்குகள் ஆர்ப்பாட்டம்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_266.html
இலங்கையின் வடமேற்கே மன்னார் மாவட்டத்தில் வில்பத்து சரணாலய காட்டுப்பகுதியில் முஸ்லிம் மக்கள் அத்துமீறி காடுகளை அழித்து குடியேறியிருக்கின்றார்கள் என்று நாட்டின் தென் பகுதியில் பிரசாரத்தைத் தொடர்ந்து சிஹல இராவண பலய உள்ளிட்ட பௌத்த சிங்கள தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த பிக்குகள் குழுவொன்று அந்த சரணாலயத்தின் எல்லைப்புறப் பிரதேசமாகிய மறிச்சுக்கட்டி பகுதிக்குச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை இந்தச் சம்பவம் நடைபெற்றதாக ஊர்வாசிகள் தெரிவித்திருக்கின்றனர்.
நாலைந்து பேருந்துகளில் இவர்கள் சென்று இறங்கியதையடுத்து. மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பபட்டிருந்தது.
காவல்துறையினரின் பாதுகாப்புடன் சென்றிருந்த பௌத்த பிக்குகள் அந்தப் பகுதியை தமது பிரதேசம் என கோஷமிட்டு உரிமை கோரியதுடன், அங்கு அரச மரக்கன்று ஒன்றையும் நாட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் ஏற்பாட்டில் இந்தப் பகுதியில் சரணாலய காட்டுப்பகுதியை அழித்து முஸ்லிம் மக்களையும் வெளிநாட்டு முஸ்லிம்களையும் குடியேற்றியிருக்கின்றார்கள் என தென்பகுதியில் முன்வைக்கப்பட்டிருந்த குற்றசாட்டையடுத்து, ஜனாதிபதியின் உத்தரவில் அரச உயர் மட்டக் குழுவொன்று இந்தப் பகுதிக்கு கடந்த வாரம் விஜயம் செய்து உண்மை நிலைமைகளை விசாரித்து ஆராய்ந்து அறிந்து சென்றிருக்கின்றது.
இதன்போது மன்னார் அரச அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளும் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் எந்தவிதமான அத்துமீறல் குடியேற்றங்களும் இங்கு இடம்பெறவில்லை என்றும் இடம்பெயர்ந்திருந்த மக்களே மீள்குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்றும் ஆதாரங்களுடன் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
