பேராதனை பல்கலைக்கழக மருத்துவக் கண்காட்சி ஆகஸ்ட்டில்
http://weligamanewsblog.blogspot.com/2015/05/blog-post_261.html
இயற்கை குடிகொண்டிருக்கும் தெற்காசியாவின் முன்னனி பல்கலைக்கழகமான போராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தினால் 12 வருடங்களின் பின்னர் இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் மாபெரும் மருத்துவக் கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான வைத்தியர் சம்பத் தென்னகோன் பல்கலைக்கழகத்தின் செனட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.
இலங்கை மருத்துவ பீடங்களின் வரலாற்றில் 1965ம் ஆண்டு முதற்தடவையாக ஒருமருத்துவக் கண்காட்சியை ஆரம்பித்துவைத்த பெருமையும் போராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தையே சாரும். இதன் பின்னர் 1973, 1978, 1986, 1993, 1998, 2003 ஆகிய வருடங்களில் மொத்தமாக 7 மருத்துவக் கண்காட்சிகளை இம்மருத்துவ பீடம் நடாத்தியிருந்தது.
இம்முறை 8வது மருத்துவக் கண்காட்சியை நடாத்துவதற்காக மருத்துவபீடம் பூரண உற்சாகத்துடன் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வருட கண்காட்சியின் தொனிப்பொருள் 'மருத்துவத்தின் அறியப்படாதஓர் சரிதை' என்பதாகும். இம்மருத்துவக் கண்காட்சியானது 2015 ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி தொடக்கம் 31ம் திகதிவரை காலை 9.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை மருத்துவபீட வளாகத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வூடக சந்திப்பில் மருத்துவபீடத்தின் சார்பாக பேராசிரியர்களான வஜிரவீரசிங்க, சிறியானிறணசிங்க ஆகியோரும் சிரேஷ்ட விரிவுரையாளர்களான சம்பத் தென்னகோன், இன்துவாரகுணரத்த ஆகியோரும் மருத்துவபீடமாணவர் சங்கத் தலைவர் ரன்சிஅபேபத்திரனவும் கலந்துகொண்டனர்.
இதன்போது இம்மருத்துவக் கண்காட்சிக்கான இணையதளமுகவரியான www.pemex2015.com மற்றும் facebook பக்கமான www.facebook.com/pemex2015 என்பனவும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
தகவல்: ஷிஹாப் ஆக்கில்
(ET)





