புங்குடுதீவு மாணவி கொலை - 9வது நபர் வெள்ளவத்தையில் சிக்கினார்

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பாடசாலை மாணவி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் ஒன்பதாவது சந்தேகநபர் கொழும்பு வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து சந்தேகபர் புங்குடுதீவிலிருந்து கொழும்பிற்கு தப்பிவந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சந்தேகபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருடைய சகோதரன் என்பது விசாரணைகளில் தெரியந்துள்ளது.

இவர் சுவிட்சர்லாந்தில் இருந்து நாடுதிரும்யிருந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் குறிக்கட்டுவான் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகபர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை, சந்தேகபர்களின் மூன்று வீடுகளை மக்கள் சேதப்படுத்தியுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களின் இந்த நடவடிக்கையால் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சில தடயப்பொருட்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ் குடாநாட்டிலும், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. - NewsFirst


Related

Local 2624651050853923387

Post a Comment

emo-but-icon

item